வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு ஏன் அலைகிறீர்கள்.? அன்றைக்கு கலைஞர் சொன்னார்.! இன்றைக்கு அவரது மகனே நெய்க்கு அலைந்த கதை.! சீமான்

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு ஏன் அலைகிறீர்கள்.? அன்றைக்கு கலைஞர் சொன்னார்.! இன்றைக்கு அவரது மகனே நெய்க்கு அலைந்த கதை.! சீமான்


seeman talk baout mk stalin

தேர்தல் பிரசாரத்துக்காக 1991-ம் ஆண்டு தமிழகம் வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இவர்கள் 7 பேரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்தநிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 போரையும் விடுதலை செய்ய உடனடியாக உத்தரவேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிக்கக்கோரி குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதியிருக்கும் தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. எழுவரையும் விடுவிக்க மனமில்லாத தமிழக ஆளுநர் அமைச்சரவைத் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர மறுத்து விடுதலைக்கு முட்டுக்கட்டை போடவும், காலம் தாழ்த்தவுமாகக் கூறிய, ‘குடியரசுத்தலைவருக்குத்தான் அதிகாரமிருக்கிறது’ எனும் மோசடி வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கடிதமெழுதி விடுதலையைக் கோரும் திமுக அரசின் செயல், மாநில உரிமையை மத்திய அரசிடம் பரிகொடுக்கும் செயலாகும். 


ராஜீவ் காந்தியோடு இறந்துபோனவர்களின் குடும்பத்தினர் விடுதலைக்கெதிராகத் தொடுத்த வழக்கு, சி.பி.ஐ.யின் பல்நோக்கு விசாரணை நிறைவடையாமை எனப் பல்வேறு விவகாரங்களைக் காரணமாகக் காட்டி, ஒப்புதல் தர மறுத்த ஆளுநர் இறுதியாகத்தான், தமக்கு அதிகாரமில்லை என்றுகூறி, குடியரசுத்தலைவர் பக்கம் மடைமாற்றிவிட்டு இந்த மோசடித்தனத்தை அரங்கேற்றுகிறார். இதனை தமிழக அரசு, ஒருபோதும் அங்கீகரிக்கவோ, ஆதரவளிக்கவோ கூடாது என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு.

எழுவரையும் விடுவிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரமிருக்கிறது எனப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமே தெளிவாக வரையறுத்து வழிகாட்டியிருக்கும் நிலையில், விடுதலைக்கு உத்தரவிட்டு மாநிலத்தின் தன்னுரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு, ஆளுநரின் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டது போல குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதியிருப்பது, மாநிலத் தன்னாட்சியுரிமையைக் காவு கொடுக்கும் கொடுஞ்செயலாகும். 

30 ஆண்டுகாலச் சிறைக்கொடுமைகளுக்கு விடிவு கிடைக்குமெனப் பெரிதும் எதிர்பார்த்திருந்த வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டை முழுமையாக அடியொற்றுவது போல, தங்கள் கைகளிலிருக்கும் விடுதலையைக் கைமாற்றிவிட்டு குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதியிருப்பது மிகப்பெரிய ஏமாற்றுவாதமாகும்.

161வது சட்டப்பிரிவின்படி, எழுவரையும் விடுவிக்கத் தங்களுக்கு உரிமையிருக்கிறது என்பதை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு குடியரசுத்தலைவரிடம் கடிதமெழுதி வேண்டுகோள் வைப்பது மாநில அரசுக்கிருக்கும் அதிகாரத்தைத் தாரைவார்ப்பதற்கு ஒப்பாகும். ‘நாங்கள் அண்ணாவின் தம்பிகள்’ என முழங்கும் ஐயா ஸ்டாலின் அவர்கள் மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் இத்தகைய வரலாற்றுப்பெருந்தவறை செய்ய முன்வரலாமா? 161வது சட்டப்பிரிவு எனும் பொன்னான வாய்ப்பிருக்கும்போது எதற்காகக் குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதும் வெற்று நடவடிக்கை? விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டுமென உளமாற நினைத்தால் கடந்த 09.09.2018 அதிமுக அரசின் அமைச்சரவை முடிவைப்போல மீண்டுமொருமுறை அமைச்சரவையைக் கூட்டி ஆளுநரின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, அதே 161வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி விடுதலையை வழியுறுத்தலாமே? 

அல்லது Tamil Nadu Suspension of Sentence Rule, 1982, சட்டத்தின் விதி 40ஐ பயன்படுத்தி, மாநில அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரமான விடுப்பு அளிக்கும் உரிமையில் எழுவருக்கும் காலவரையற்ற விடுப்பு வழங்கியிருக்கலாமே?? அவைகள்தான் ஆளுநருக்கு நெருக்கடியை தரும் என்று நாங்கள் எத்தனையோ முறை வலியுறுத்தியபோதும் அன்றைய அதிமுக அரசு செய்ய மறுத்தது; தயங்கியது. பாஜகவின் கைப்பாவையாக மாறி, கரைந்துபோன அதிமுக அரசு அதனைச் செய்யத் தயங்கியதென்றால் அதில் வியப்புக்கு இடமில்லை. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசை வன்மையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் திமுக அரசு அதனைச் செய்யாது கடிதமெழுதுவதுதான் ஏனென்று புரியவில்லை.

2014ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் எழுவரையும் விடுவிக்கப்போவதாக தமிழகச் சட்டப்பேரவையில் அறிவித்து, குற்றவியல் நடை முறைச்சட்டம் 435யைப் பயன்படுத்தி, 3 நாட்கள் அவகாசம் கொடுத்து மத்திய அரசிடம் கருத்துகோரினார். அத்தகைய சட்டவிதிப் பின்பற்றலைத் தவறெனச் சுட்டிக்காட்டிய ஐயா கருணாநிதி அவர்கள், 161 எனும் அரசியல் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி எவரையும் கேட்காது விடுதலைசெய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரமிருக்கும்போது, வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு ஏன் அலைகிறீர்கள்? எனக் கேட்டார். இன்றைக்கு அவரது மகனே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக குடியரசுத்தலைவரை நாடியிருப்பது வரலாற்றுப் பெருங்கொடுமையாகும்.

எழுவர் விடுதலை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலை. எட்டு கோடித் தமிழ் மக்களின் விருப்பம். உலகமெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழர்களின் இன விடுதலைக்கான வெளிச்சக்கீற்று. அதற்காக எத்தகைய விலைகொடுக்கவும், எத்தகைய இடரை எதிர்கொள்ளவும் தமிழர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆகவே, தங்களுக்கிருக்கும் 161வது சட்டப்பிரிவு எனும் வலிமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டுமொருமுறை அமைச்சரவையைக் கூட்டி, முந்தைய அரசின் 09.09.2018 அமைச்சரவை முடிவை புறம்தள்ளும் அளுநரை கண்டித்தும், அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்த இடைபட்ட காலத்தில் Tamil Nadu Suspension of Sentence Rule, 1982, சட்டத்தின் விதி 40ஐ பயன்படுத்தி, மாநில அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரமான விடுப்பு அளிக்கும் உரிமையில் எழுவருக்கும் காலவரையற்ற விடுப்பு வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அவ்விடுதலையைச் சாத்தியப்படுத்தும்பட்சத்தில், திமுகவின் நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவாய் நின்று, வரும் அத்தனை நெருக்கடிகளையும் எதிர்கொள்ள திமுக அரசுக்குத் தோளுக்குத் துணையாக நிற்போமென உறுதியளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.