தமிழகம்

வீரம்செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா.? கொந்தளித்த சீமான் அமேசானுக்கு கடும் எச்சரிக்கை.!

Summary:

"தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை நிறுத்தாவிடில் அமேசான் நிறுவனத்தின் அன

"தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை நிறுத்தாவிடில் அமேசான் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் தமிழர்கள் புறக்கணிப்போம் என அமேசான் பிரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘தி பேமிலி மேன்’ முதல் பாகத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இதில் நடிகை சமந்தா ஈழப்போராளியாக நடித்துள்ளார்.  இந்த தொடரில் ஈழப்போராட்டத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பல்வேறு தரப்பினரும் தொடரை தடைசெய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், எப்போதும் ஈழ பிரச்சனைகளுக்கு தீவிர ஆதரவளிக்கும் நாம் தமிழர் கட்சியும் இந்த தொடருக்கு கண்டனம் தெரிவித்தோடு, தடைசெய்யவும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி, அதனைத் தடுத்து நிறுத்துவோம் என எச்சரிக்கை விடுத்திருந்த சீமான், தற்போது அமேசான் பிரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சீமான் அந்த கடிதத்தில், உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூன் 04, 2021 அன்று உங்களது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில், ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடர் வெளியாகி, தமிழர்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களையும், தமிழர்களின் வீரம்செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக இழிவாகச் சித்தரித்து அதனைத் தவறாகக் காட்சிப்படுத்தியிருக்கும், ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

அவ்வாறு செய்யத்தவறி எங்கள் உணர்வுகளை அலட்சியம் செய்து உதறித்தள்ளினால், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து, அமேசான் பிரைம் வீடியோ உட்பட அமேசான் நிறுவனத்தின் எல்லாச் சேவைகளையும் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் கருத்துப் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம் என சீமான் கடிதம் அனுப்பியுள்ளார். 


Advertisement