ஈன்றெடுத்த தாயை பார்க்க 23 வருடம் கழித்து நெதர்லாந்தில் இருந்து வந்த மகள்..!

ஈன்றெடுத்த தாயை பார்க்க 23 வருடம் கழித்து நெதர்லாந்தில் இருந்து வந்த மகள்..!



Salem Kadayampatti Baby Went from Netherlands After 23 Years as Girl

23 வருடத்திற்கு முன்னதாக தத்து கொடுக்கப்பட்ட குழந்தை, தனது சொந்த தாயை கடல்கடந்து வந்து பார்த்த நெகிழ்ச்சி சம்பவம் சேலம் அருகே நடந்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி தாஷசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 50). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜகுருவில் கணவர் ரங்கநாதனுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஜெனிபர், அமுதவல்லி என்ற 2 மகள்கள் பிறந்துள்ளனர். 

ரங்கநாதனின் முதல் மனைவிக்கு குழந்தைகள் இருந்த நிலையில், ரங்கநாதனுக்கு மதுபான பழக்கம் இருந்ததால், அமுதாவின் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. கணவரும் ஒருகட்டத்தில் கைவிட்டு சென்றதால், காடையாம்பட்டி தாஷசமுத்திரத்தில் பெற்றோரின் இல்லத்திற்கு அமுதா வந்துள்ளார். அமுதவல்லி பிறந்ததும் குழந்தையை வளர்க்க இயலாமல் தவித்த நிலையில், குழந்தையை தத்தெடுக்க முன்வந்துள்ளார். 

பிறந்து 11 ஆவது நாளில் அமுதவல்லியை சேலத்தில் செயல்பட்டு வரும் கிறிஸ்துவ மிஷினரியில் தத்து கொடுக்கவே, அக்குழந்தையை 40 ஆவது நாளில் நெதர்லாந்து நாட்டினை சேர்ந்த தம்பதிக்கு மிஷினரி ஒப்படைத்துள்ளது. அவர்கள் குழந்தையை தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்று நெதர்லாந்து பிரஜையாக வளர்த்து வந்துள்ளனர். 

Salem

அங்கு பள்ளிப்படிப்பை முடித்த அமுதவல்லி, 23 வருடங்கள் கழித்து அலங்கார பூ விற்பனை (Flower Shop) நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். நெதர்லாந்து தம்பதி அமுதவல்லியை சொந்த மகளாக அளவற்ற பாசம் காண்பித்து வளர்த்து வந்தாலும், ஒரு சமயத்தில் தனது பிறப்பு குறித்த உண்மை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தன்னை ஈன்றெடுத்த தாயை நேரில் பார்க்க விரும்பி, கடந்த 2 வருடமாக முகநூல் மற்றும் இன்டர்நெட் வாயிலாக தேடியும் பலன் கிடைக்கவில்லை. ஆனால், வளர்ப்பு பெற்றோர்களே முன்வந்து மகளுக்கு உதவி செய்த நிலையில், பெற்றோரை பார்த்து வர வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளனர்.

நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த அமுதவல்லி, மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள தாஷசமுத்திரம் பகுதிக்கு சென்று தாயை நேரில் பார்த்துள்ளார். மொழி பெயர்ப்பாளர் மூலமாக உண்மையை அறிந்த தாய், உணர்ச்சி பெருக்கில் மகளை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டு கதறி அழுதார்.