சபரிமலையில் பெண்கள் தரிசனம்; தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்!

சபரிமலையில் பெண்கள் தரிசனம்; தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்!



sabarimala protest in tamilnadu

பல்வேறு எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் தாண்டி சபரிமலையில் நேற்று அதிகாலை பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரண்டு பெண்மணிகள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, கோவில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜை நடத்தப்பட்டபின் ஒருமணி நேரம் கழித்து நடை மீண்டும் திறக்கப்பட்டது.

சபரிமலைக்கு 2 பெண்கள் தரிசிக்க சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள கேரள சுற்றுலா அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

sabarimalai

இந்நிலையில் நேற்று சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் சாமி தரிசனத்திற்கு ஆதரவு திரட்ட மனித சுவர் போராட்டம் நடத்தப்பட்டது. காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த போராட்டத்தில் 35 லட்சம் பெண்கள் பங்கேற்றனர்.

இதனிடையே, இந்து அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருவனந்தபுரம், பத்தினம் திட்டா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. இதனால், சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், இன்று நடைபெறுவதாக இருந்த கல்லூரித் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

sabarimalai

சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள இந்த அலுவலகத்திற்கு நேற்று இரவு உருட்டுக் கட்டைகளுடன் வந்த 15 பேர் கொண்ட கும்பல், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார், அங்குள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், "சபரிமலைக்கு பெண்கள் வேண்டுமென்றே சென்றுள்ளனர்; அங்குள்ள கம்யூனிஸ்ட் அரசு அவர்களுக்கு உதவி உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.