பட்டப்பகலில் காவல் நிலையம் எதிரே நடந்த துணிச்சலான கொள்ளை சம்பவம்! கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு



robbery in chennai infront of police station

சென்னை திருவான்மியூர் காவல் நிலையம் எதிரே உள்ள நகைக் கடையில் வாலிபர் ஒருவர் பட்டப்பகலில் தன் கைவரிசையை காட்டி விட்டு தப்பித்துள்ளார். இந்த சம்பவத்தை செய்துவிட்டு செல்லும் காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருவான்மியூர் காலடிப்பேட்டை  காவல் நிலையம் எதிரே ஸ்ரீ கிருஷ்ணா என்ற நகைக்கடை உள்ளது. அந்த கடைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நகை வாங்குவது போல் ஒரு இளைஞர் வந்துள்ளார். கடைக்கு வந்த அவர் உரிமையாளரிடம் நகை வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளர் பக்தாராம் சவுத்ரி, நகைகளை காண்பித்துள்ளார். 

robbery in chennai jewellery shop

அப்போது, கொள்ளையடிக்க தயாராக இருந்த அந்த நபர் தன் கையில் மறைந்து வைத்திருந்த மிளகாய் பொடியை, நகைக்கடை உரிமையாளரின் முகத்தில் வீசியுள்ளார். இதில் கடை உரிமையாளர் நிலை தடுமாறவே நகைகளை எடுத்துக்கொண்டு, அந்த நபர் தப்பி ஓடியுள்ளான்.

இதனை அடுத்து கடை உரிமையாளர் எதிரில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் அந்த இளைஞர் உஷாராக ஏற்கனவே தொப்பி அணிந்து இருந்ததால் அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் கிடைத்திருக்கும் அடையாளங்களை வைத்து காவல்துறையினர் அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

robbery in chennai jewellery shop

மேலும் சிசிடிவி கேமராவில் உள்ள தேதி மற்றும் நேரங்கள் தவறாக இருந்துள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் 2017 ஆம் ஆண்டு என்று பதிவாகி உள்ளது. இதனை பற்றி விளக்கமளித்த கடை உரிமையாளர் கேமராவில் உள்ள தேதியை மாற்ற மறந்து விட்டதே காரணம் என கூறியுள்ளார்.