இன்று முதல் 3 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் மிரட்ட காத்திருக்கும் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!Rain expected to threaten 16 districts for 3 days from today

நடப்பு ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நல்ல மழை பெய்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் சற்று மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.