அமைச்சரிடம் மனு கொடுக்க வந்தவரை தாறுமாறாக தாக்கிய அ.தி.மு.க நிர்வாகிகள்.!

சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க வந்த நபர் தாக்கப்பட்டுள்ளார்.


old-man-attacked-in-vettanviduthi

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெட்டன் விடுதியில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.  அமைச்சர் மினி கிளினிக் திறக்க வருகிறார் எனபதை அறிந்தவர்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி அளிப்பதற்காக காத்திருந்தனர்.

அப்போது வெட்டன்விடுதியைச் சேர்ந்த கண்ணையா என்பவரும் சென்றுள்ளார். தனது மகளின் திருமண நிதி உதவிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும், உதவி கிடைக்காததால் சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அப்போது, அவர் லேசான மது போதையில் இருந்ததாகக் கூறி, அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை சரமாரியாக தாக்கி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததாலேயே கண்ணையா இவ்வாறு நடந்துகொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனையடுத்து இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானம் செய்தனர்.