கோடை விடுமுறையில் இதெல்லாம் நடத்தக்கூடாது.. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி அறிவிப்பு.!No special classes in summer holidays announced sivdas meena

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடுமையான வெப்பஅலை வீசி வருவதால் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்
கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என தலைமை செயலாளர் சிவ்தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுட்டெரிக்கும் வெயில்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை கால வெப்பஅலை குறித்த அறிவிக்கையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்ப பகுதிகளில் மார்ச் முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்பஅலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை 

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை கூடுதலாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து, வெப்ப அலை தாக்கத்தால் ஏற்படகூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

school

இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40°C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவுவதால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

சிறப்பு வகுப்புகள் கூடாது 
இந்நிலையில் வெப்பஅலையின் தாக்கத்தில் இருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எஅனைத்து வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.