அப்பா நான் செத்துடுறேன், என் கடனை நீ கொடுத்திடுப்பா.. ஆன்லைன் ரம்மியால் பட்டதாரி இளைஞர் விபரீதம்..!

அப்பா நான் செத்துடுறேன், என் கடனை நீ கொடுத்திடுப்பா.. ஆன்லைன் ரம்மியால் பட்டதாரி இளைஞர் விபரீதம்..!


Namakkal Youngster Suicide due to Online Rummy

ராசிபுரத்தில் பட்டதாரி இளைஞர் ஆன்லைன் ரம்மியால் கடன் வாங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடனுக்கு பொறுப்பாளியாக தந்தைக்கு கடனை அடைக்க கூறி கடிதம் எழுதி வைத்து உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. பார்த்து பார்த்து பெற்றெடுத்து வளர்த்த பிள்ளை பாதியில் பாடையில் போக, மீதி காலத்திற்கு தந்தையை கடனாளியாக்கியது எப்படி என விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் வசித்து வருபவர் சுரேஷ். பட்டதாரி இளைஞரான இவர் ஆன்லைன் ரம்மி கேமுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் பணத்தை இழந்த அவர், ஒவ்வொரு முறையும் விட்டதை பிடிக்கலாம் என எண்ணி ரூ.5 இலட்சம் வரை கடனுக்கு உள்ளாகியுள்ளார். 

இதனால் ஒருகட்டத்தில் மனமுடைந்து போன சுரேஷ் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து கடிதத்தில் சுரேஷ் எழுதியிருப்பதாவது, "இந்த கடிதம் எங்க அப்பா, அம்மா மட்டுமே படிக்கவும். வேறு யாரும் படிக்கக் கூடாது. அப்பா நீங்களும் யாரிடமும் கூறாதீர்கள். ஆன்லைன் ரம்மி கேம் விளையாடி நிறைய பணத்தை விட்டுவிட்டேன். 

நான் இருந்தால் மீண்டும் அதை விளையாடலாம் என்ற எண்ணத்துடன் எல்லாத்தையும் இழந்து விடுவேன். அதனால் நான் போறேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் தரவேண்டிய பணம் ஹரிக்கு ரூ. 30 ஆயிரம், கிருத்திகாவுக்கு ரூ.81 ஆயிரம், சரவணனுக்கு ரூ.5 ஆயிரம், எழிலுக்கு ரூ. 2 ஆயிரம், அஜித்துக்கு ரூ. 2 ஆயிரம், சந்தோஷுக்கு ரூ. 2 ஆயிரம், பாரிக்கு ரூ. 3 ஆயிரம், பாபுவுக்கு ரூ. 3 ஆயிரம், சேதுபதிக்கு ரூ. 3 ஆயிரம், இதை தவிர்த்து ரூ. 2,000 ரூ.2,500 சேர்த்து 12 மாத லோன் இருக்கிறது. 

namakkal

இதை மட்டும் நீங்கள் செலுத்தி விடுங்கள். நானும் இந்த கேமை விட்டு விடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என்னால் முடியவில்லை. இந்த நிமிடம் கூட பணம் இருந்தால் இந்த விளையாட்டை விளையாடலாம் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது. மிஸ் யூ அப்பா, அம்மா.. சென்று வருகிறேன்" என்று எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஆன்லைன் ரம்மி அரசு அதிகாரிகள் முதல் ஏழை மக்கள் வரை பலரின் உயிரை காவு வாங்கியுள்ளது. இத்தகைய நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்நிறுவனமோ தனக்கு பணம் கிடைத்தாலே கொண்டாட்டம் என்பதை போல, அதனை விளம்பரப்படுத்த தமிழ் நடிகர்களையே உபயோகம் செய்து தமிழர்களின் உயிரை காவு வாங்குகிறது.