தமிழகம்

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் என்பதற்கு இடமே இல்லை.! அமைச்சர் சேகர் பாபு

Summary:

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் என்பதற்கு இடமே இல்லை.! அமைச்சர் சேகர் பாபு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்த லாவண்யா என்ற சிறுமி தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், இவர் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.

இந்தநிலையில், மாணவி லாவண்யா கடந்த 9-ம் தேதி விஷம் குடித்துள்ளார். விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் விஷம் குடித்துவிட்டதாக கூறினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். 

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை மாணவி லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில், தனது மகளை கட்டாய மதமாற்றம் செய்ய பள்ளிநிர்வாகம் முயற்சித்ததாகவும், அதற்கு தனது மகள் மறுப்பு தெரிவித்ததால் லாவண்யாவை விடுதி கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர். இதனால், தான் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக லாவண்யாவின் தந்தை முருகானந்தம் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாணவி லாவண்யாவின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பள்ளியில் மதமாற்றம் செய்ய முயன்றதால் மாணவி தற்கொலை செய்தார் என்றும் தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முக்கிய தலைவர்கள் வலியுறுத்தினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்டாய மதமாற்றம் என்பதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை. எம்மதமும் சம்மதமே. அனைத்து மதமும் சம்மதம் என்பதுதான் முதலமைச்சரின் நிலையும் என தெரிவித்தார்.


Advertisement