பஸ்ச எடுடா பார்ப்போம்.. பேருந்தில் கடனுக்கு டிக்கெட் கேட்ட முருகன்.. டிக்கெட் தராததால் ஆத்திரம்..

கடனுக்கு டிக்கெட் தராததால் பயணி ஒருவர் பேருந்தின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம்


Mana dharna in front of bus near Trichy

கடனுக்கு டிக்கெட் தராததால் பயணி ஒருவர் பேருந்தின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்த அயனாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். பூசாரியாக இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்துவரும்நிலையில், வியாபாரத்திற்காக திருச்சி பூ மார்க்கெட்டுக்கு சென்று பூ வாங்கிவிட்டு, தனியார் பேருந்து ஒன்றில் ஏறி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

அப்போது பேருந்தின் நடத்துனர் முருகனிடம் டிக்கெட் எடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை, ஊருக்கு வந்து தருவதாக முருகன் கூறியுள்ளார். இதனால் பேருந்தின் நடத்துனர் மற்றும் முருகன் இடையே வாக்குவாதம் ஏற்பட, ஒருகட்டத்தில் பேருந்தை நிறுத்தி, முருகனை பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளார் நடத்துனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், சட்டெனெ பேருந்தின் முன் அமர்ந்துகொண்டு, பேருந்தை எடுக்காவிட்டால் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும் பேருந்தின் நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த லால்குடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் கவனித்துள்ளார்.

உடனே முருகனுக்கு தான் டிக்கெட் எடுப்பதாக கூறி, அவருக்கு டிக்கெட் எடுத்து இருவரையும் சமாதானம் செய்துள்ளார். ஆனால் பேருந்தில் மீண்டும் ஏறிய முருகன், தொடர்ந்து நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கியுள்ளார். இதனால் சக பயணிகள் ஆத்திரம் அடைந்த நிலையில், முருகனை பேருந்தில் இருந்து இறக்கிவிடும்படி கேட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் பழனியம்மாள், முருகனுக்கு 50 ரூபாய் பணம் கொடுத்து வேறொரு பேருந்தில் செல்லுமாறு அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.