தமிழகம்

காதலுக்கு எதிர்ப்பால் பரிதாபம்.. பதின்ம ஈர்ப்பு காதல் ஜோடி விபரீதம்..!

Summary:

காதலுக்கு எதிர்ப்பால் பரிதாபம்.. பதின்ம ஈர்ப்பு காதல் ஜோடி விபரீதம்..!

காதலுக்கு தாய் மறுப்பு தெரிவித்ததால், பத்தாம் வகுப்பு மாணவி அவருடைய காதலனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, கைகாட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் அஜய் (வயது 23). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்த விஷயம் சிறுமியின் தாயாருக்கு தெரியவர, அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி, தனது காதலனுடன் நேற்று முன்தினம் இரவு மாயமானார். தொடர்ந்து சிறுமியை காணாததால் அவரது பெற்றோர் காவல்துறையில் புகாரளித்த நிலையில், அவிநாசி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், திருப்பூர் ஆத்துப்பாளையம் செல்லும் வழியில் கிருஷ்ணவீணா நகர் அருகாமையில், தனியார் கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு அப்பகுதி தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரித்ததில், இறந்தது மாயமான சிறுமி என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அதே கிணற்றில் தேடியபோது அஜய்யின் உடலும் கிடைத்துள்ளது. பின் இவர்கள் இருவரது உடல்களையும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்த நிலையில், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "இருவரும் அதிகாலை இருசக்கரவாகனத்தில் வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், இருசக்கர வாகனத்தை கிணற்றுக்கு 300 மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். அத்துடன் இறந்துபோன சிறுமி ஜெர்கின் அணிந்திருந்த காரணத்தால், அவரது உடல் முதலில் தண்ணீரில் மிதந்துள்ளது.

இதற்கு பின் தான் அஜய்யின் உடலை எங்களால் தேட முடிந்தது. மேலும், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில், அஜய் உடலை இன்று பிரேத பரிசோதனை செய்ய உள்ளார்கள்" என்று கூறியுள்ளனர்.


Advertisement