
மூடை மூடையாக குட்கா பொருட்கள்.. லாரி கதவை திறந்து பதறிப்போன அதிகாரிகள்..!
ஓசூர் வழியே சென்னைக்கு ரூ.50 இலட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்பட்ட நிலையில், அவை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், பூணப்பள்ளி சோதனை சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற மினி லாரி, காவல் துறையினரின் சோதனை சாவடிக்கு முன்பு நீண்ட நேரம் ஓரமாக நின்று கொண்டு இருந்தது.
இதனைகவனித்த அதிகாரிகள் வாகனத்தில் இருந்தவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, இருவரையும் வாகனத்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், இருவரும் தூத்துக்குடியை சார்ந்த தர்மலிங்கம், மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது.
வாகனத்தை திறந்து சோதனை செய்த சமயத்தில் 8 டன் குட்கா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை பெங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னை பகுதிக்கு கடத்தி செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட இருந்ததும் தெரியவந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.50 இலட்சம் ஆகும். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.
Advertisement
Advertisement