மூடப்பட்ட கோயம்பேடு சந்தை! தொடங்கியது திருமழிசை காய்கறி சந்தை!

கோயம்பேடு சந்தை கொரோனா தொற்றால் மூடப்பட்ட நிலையில், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது.
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும், சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலமாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதையடுத்து தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடையவர்கள் மூலமாக நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், அதனை தடுக்கும் வகையில் சந்தை மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், கோயம்பேடு சந்தை கடந்த மே 5-ம் தேதி தற்காலிக மாக மூடப்பட்டது. இதனையடுத்து, பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் மாற்று இடம் வழங்கப் பட்டு, தற்காலிக மார்க்கெட் அமைப் பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
கோயம்பேடு சந்தை மூடப்பட்டதின் விளைவாக பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே மொத்த வியாபாரிகள் கையாளுகையில் இருந்த சரக்குகளே விற்பனை ஆனது. திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது.