விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர்: காவிரி ஆற்றில் கரைந்து போன பரிதாபம்..!

விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர்: காவிரி ஆற்றில் கரைந்து போன பரிதாபம்..!



It is a pity that the boy who went to melt the statue of Ganesha was drowned in the Cauvery river

சேலம் மாவட்டம், களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் பிருத்திவ் ராஜ் (28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு செல்ஃபோன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவர்கள் வசித்துவரும் தெருவில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக நேற்று மேட்டூருக்கு சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். மேட்டூர் அடுத்த திப்பம்பட்டி பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று விநாயகர் சிலையை கரைத்தனர்.

அப்போது பிருத்திவ் ராஜ் எதிர்பாராத விதமாக காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியுள்ளார். அதன் பின்பு மீண்டும் அவர் மேலே வரவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது  நண்பர்கள் ஆற்றுக்குள் குதித்து அவரை மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இதன் பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் பிருத்திவ் ராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணி கருமலைக்கடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.