தமிழகம் மருத்துவம்

அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.!

Summary:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை செலுத்திக்கொண்டார்.

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி என சமீபத்தில்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார். தற்போது கொரோனாவை தடுக்கும் முயற்சியாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி கொரோனா தடுப்பூசி திட்டம் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் முதற்கட்டமாக 166 மையங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோவிட் தடுப்பூசியை  செலுத்திக்கொண்டார். இன்று காலை 9 மணிக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முன்கள பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.


Advertisement