நடராஜனை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.! வீரத்தமிழனை உதராணமாக வைத்து கோலியை விளாசிய சுனில் கவாஸ்கர்.!
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், T20 டெஸ்ட் என மூன்று தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணியும், T20 தொடரை இந்திய அணியும் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமாக தோல்வியடைந்ததால், கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்தநிலையில், இந்திய அணித்தலைவர் விராட் கோலி, தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி நாடு திரும்பவுள்ளார்.
விராட் கோலி இல்லாமல் இந்திய திணறும் என்று முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில், இந்திய அணிக்கு புதிதாக வந்தவர் நடராஜன். டி20-யில் சிறப்பாக ஆடினார். ஹர்திக் பாண்டியா தனது தொடர் நாயகன் விருதையும் கூட நடராஜனுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவரின் யார்க்கர் பந்து வீச்சு சிறப்பாக அமைந்திருந்தது.

ஐபிஎல் தொடரின் போதுதான், நடராஜனும் தன் முதல் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், அவர் தன் குழந்தையை பார்க்க உடனடியாக நாடு திரும்பவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்து அமீரகத்திலிருந்து நடராஜன் நேரடியாக ஆஸ்திரேலியா சென்றார். நடராஜனின் அபாரமான பந்து வீச்சைப் பார்த்த பிறகு டெஸ்ட் தொடருக்காக அவரை அங்கேயே தங்க வைத்தனர். அணியில் விளையாடுவதற்காக அல்ல. வலை பயிற்சியில் அவர் பந்து வீசிக் கொண்டிருக்கிறார்.
தற்போது நடராஜன் வலைப்பந்து வீச்சாளராக இருக்கிறார். ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பிறகே நடராஜன் இந்தியா வந்து தன் முதல் குழந்தையை, முதல் முறையாகப் பார்க்க உள்ளார். ஆனால், விராட் முதல் டெஸ்ட் முடிந்தவுடன் தன்னுடைய முதல் குழந்தைப் பிறப்புக்காக நாடு திரும்புகிறார். இதுதான் இந்திய கிரிக்கெட் வாரியம். ஒருவருக்கு ஒரு விதி, இன்னொரு வீரருக்கோ மற்றொரு விதி. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், ரவிச்சந்திரன் அஸ்வினை, நடராஜனை கேட்டு பாருங்கள் என்று விமர்சித்துள்ளார்.