தமிழகம்

கொரோனாவால் வாடிய குடும்பம்! 2 மகன்களுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை! பதறி துடித்த தாய்!

Summary:

Father commits suicide after poisoning 2 sons

கேரளாவை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் சென்னை ஊர்ப்பக்கம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். பின்னர், அதே பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். 

சந்தோஷ்குமாரின் இரண்டு மகன்களும் மூளை வளர்ச்சி குறைவானவர்கள் என்பதால், டீக்கடையை மூடிவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அவரால் சரிவர குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தோஷ்குமாரிடம், உணவு பொருட்கள் கேட்டு, அவரது மகன்கள் அடம்பிடித்துள்ளனர். ஆனால், தான் பிள்ளைகளுக்கு எதுவும் வாங்கி கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு மனவேதனை அடைந்த அவர், மாலையில் கடைக்கு சென்று எலி மருந்து வாங்கி வந்து, தனது 2 மகன்கள் மற்றும் சந்தோஷ்குமாரும் சேர்ந்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர். சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த மனைவி சுமதிக்கும் விஷத்தை கொடுத்து சாப்பிட சொல்லியுள்ளார்.

ஆனால் சுமதி மறுத்துள்ளார். சிறிது நேரத்தில் சந்தோஷ் மற்றும் 2 மகன்கள் மயங்கி கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுமதி, அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் உயிரிழந்தார். மகன்கள் இருவரும் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement