தமிழகம்

குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

Summary:

family-suicide

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி திருவேங்கடம். அவருடைய மனைவி பரிமளா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். நிகேஷ் 7 வயது, மாதேஷ் 2 வயது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் நிகேஷ் திடீரென உடல் நிலை சரியில்லாமல் இறந்தவிட்டான்.குழந்தையை இழந்த குடும்பம் துக்கத்தில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இறந்த குழந்தை நிகேஷுக்கு நேற்று 8-வது பிறந்தநாள். குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டிலேயே படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, குடியாத்தத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்குச் சென்று  அன்னதானம் வழங்கி விட்டு,  இரவு சோகத்துடன் வீட்டுக்கு வந்துள்ளனர். மகனின் இறப்பைத் தாங்க முடியாமல் குடும்பமே சோகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, திருவேங்கடமும் பரிமளாவும் தூக்கில் தொங்கியவாரு இறந்துகிடந்தனர். அவர்களின் இரண்டாவது குழந்தை மாதேஷும் கீழே இறந்துகிடந்தான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து,  குடியாத்தம் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக  குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்துபோன  சம்பவம்  அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 மேலும், இது குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.விசாரணையில் தனது முதல் மகன் இறந்துபோகவே துக்கத்தில் இருந்தது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த தம்பதி, தனது இரண்டாவது மகனை அவர்களே கொலைசெய்துவிட்டு  தூக்கிட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


Advertisement