இடைக்கால பொதுச்செயலாளராக தலைமை அலுவலகம் செல்லும் எடப்பாடி பழனிசாமி: அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பு..!

இடைக்கால பொதுச்செயலாளராக தலைமை அலுவலகம் செல்லும் எடப்பாடி பழனிசாமி: அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பு..!


edappadi palaniswami goes to head quarter of admk at royapettah

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க  பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் 2600 க்கும் மேற்பட்ட பொதுக்குழுவினர் ஆதரவுடன் அவர் இந்த பொறுப்புக்கு தேர்வானதாக கூறப்பட்டிருந்தது.

பொதுக்குழு நடந்த அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு  இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற  உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு பின்பும் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. இதன் பின்னர் பொதுக்குழுவிற்கு எதிராக நடைபெற்ற வழக்கில் தனி நீதிபதி ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்புக்கு எதிரான ஈ.பி.எஸ் தரப்பின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) அ.தி.மு.க அலுவலகத்திற்கு வருகிறார். காலை 10 மணிக்கு கட்சி அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.