ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட நண்பர்கள்: ஆழத்திற்கு சென்று விபரீதத்தை தேடிய வாலிபரால் நிகழ்ந்த சோகம்..!

ஆற்றில் இறங்கி ஆட்டம் போட்ட நண்பர்கள்: ஆழத்திற்கு சென்று விபரீதத்தை தேடிய வாலிபரால் நிகழ்ந்த சோகம்..!


Due to the rain in the river, the water flow was fast and unexpectedly both of them drowned

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள வி.ஆண்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் விஷ்வா (18). இவர் தனியாருக்கு சொந்தமான தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை, விஷ்வா தனது நண்பர்களான நரேந்திரன் (20), ரிஷிதரன் (18), பாலமுருகன் (19), அபிஷேக் (18) மற்றும் பாலாஜி (19) ஆகியோருடன் கண்ட்ரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார்.

ஆற்றில் இறங்கிய நண்பர்கள் நீச்சலடித்து மகிழ்ந்த நிலையில், விஷ்வா, பாலாஜி இருவரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். ஆற்றில் மழையின் காரணமாக நீர்வரத்து வேகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதனை கண்ட அவர்களது நண்பர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரில்  பாலாஜியை மட்டும் அவர்களால் காப்பாற்ற முடிந்தது. விஷ்வா ஆற்றில் மூழ்கினார்.

இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் இறங்கி விஷ்வாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  2 மணி நேர தேடுதலுக்கு பின்னர், விஷ்வாவை சடலாமாக மீட்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையிலான காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். பின்னர், விஷ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.