மது அருந்திவிட்டு பைக் ஓட்டி வந்த நபரை அபராதம் செலுத்தச்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர்.! பளார் என அறைந்த போதை ஆசாமி.!

மது அருந்திவிட்டு பைக் ஓட்டி வந்த நபரை அபராதம் செலுத்தச்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர்.! பளார் என அறைந்த போதை ஆசாமி.!


drunk-man-attacked-sub-inspector

சென்னையில்  சமீப நாட்களாகவே  போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி, தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள், போதையில் வாகனம் ஒட்டி வருபவர்கள் மற்றும் காரில் சீட்டு பெல்ட் அணியாமல் வருகின்றவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் 2-வது அவென்யு சந்திப்பு அருகே, திருமங்கலம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கராஜ் (50) தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்னர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதை கண்ட தங்கராஜ், அவரை தூக்கி பரிசோதனை கருவி மூலம் அவரை சோதனை செய்துள்ளார். அதில், அவர் போதையில் இருப்பது உறுதியானது.   இதனால், அவருக்கு ரூ.10 ஆயிரம்  அபராதம் விதிக்க முயன்றனர்.  அப்போது அந்த நபர் என்னால் அபராதம் செலுத்த முடியாது என வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, உதவி ஆய்வாளர் தங்கராஜ்  மது அருந்திவிட்டு பைக் ஓட்டி வந்துள்ளதால் நீ அபராதம் செலுத்திவிட்டு, பைக்கை எடுத்துச் செல் என கூறி பைக் சாவியை எடுத்துள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த அந்த  நபர், திடீரென உதவி ஆய்வாளர் தங்கராஜின் கன்னத்தில் 'பளார்' என அறைந்து விட்டு தப்பிச்சென்றார். இது குறித்து தங்கராஜ் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்தது அரும்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த லோகேஷ்வர்மன் (29) என்பதும், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து தப்பி ஓடிய லோகேஷ்வர்மனை திருமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.