சட்டமன்ற தேர்தலில் சீமானை வீழ்த்தி வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ-வின் கட்சி பதவி பறிப்பு.! என்ன காரணம்.?

சட்டமன்ற தேர்தலில் சீமானை வீழ்த்தி வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ-வின் கட்சி பதவி பறிப்பு.! என்ன காரணம்.?


DMK MLA KP shankar removed from party responsibility


திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.பி சங்கர் கடும் போட்டிகளுக்கு இடையே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வீழ்த்தி வெற்றி பெற்றார். இவர்  மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமியின் சகோதரர் ஆவார். 

சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டட விபத்தின்போது, அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட வருக்கு வீடு கட்டித் தருவதாகவும், அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை தானே வாங்கி தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக கே.பி சங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை மேற்குப் பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.