பிறந்த நாளிலேயே உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்! தமிழக முதல்வர் இரங்கல்!

பிறந்த நாளிலேயே உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்! தமிழக முதல்வர் இரங்கல்!


dmk-mla-j-anbalagan-dead

திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமாக இருந்தவர்  ஜெ.அன்பழகன். இவர் கொரோனா ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஏராளமான உதவிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில்,  அவர் கடந்த 2ஆம் தேதி குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

anbalagan

அதனைத் தொடர்ந்து 62 வயது நிறைந்த  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, படிப்படியாக உடல்நலம் தேறி வருவதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென மீண்டும் அவரது உடல்நலம் கவலைக்கிடமாகி இன்று காலை 8 மணியளவில் அவர் மரணமடைந்தார். இதனால் திமுக கட்சியினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும் இன்று எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு 62வது பிறந்தநாள். அவர் 1958ஆம் ஆண்டு ஜூன்  10ஆம் தேதி பிறந்தார்.  இந்நிலையில் பிறந்த நாளிலேயே அவர் உயிரிழந்தது அனைவரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜெ.அன்பழகனின்  மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.