தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்... திடீரென மனநலம் பாதிக்கப்பட்டு நடந்த பயங்கரம்..!Dharmapuri Son Killed Father He Mentally Affected

 

கட்டிட ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக தந்தை பேசியதால் மனதுடைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தந்தையை போட்டுத்தள்ளிய பயங்கரம் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், எரியூர் அங்கப்பன் கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் குமரன் (வயது 70). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் இளைய மகன் தங்கராஜ் (வயது 40). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்கிறார். 

தங்கராஜின் மனைவி இராஜேஸ்வரி. தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். இந்நிலையில், தங்கராஜ் புதிதாக வீடு கட்டி வரவே, ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணிகளை முடிக்கவில்லை. இதனால் தங்கராஜ் - ஒப்பந்ததாரர் இடையே தகராறு ஏற்பட்டு, கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

தங்கராஜின் தந்தை குமரன் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பேசி வரவே, ஆத்திரத்தில் இருந்த தங்கராஜ் நேற்று தந்தையை கம்பியால் அடித்துள்ளார். இதனால் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவ்வழியே சென்ற பால் வண்டி ஓட்டுனரும் தாக்கப்பட்டார். 

அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது போல் செயல்பட்டதால், உள்ளூர் மக்கள் தங்கராஜை பிடித்து கயிற்றில் கட்டிவைத்தனர். பின் இதுகுறித்து எரியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தங்கராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.