தமிழகம் இந்தியா காதல் – உறவுகள்

சிறுமியை கடத்தி தென்னிந்தியாவில் உல்லாச உலா..! காதலில் விழுந்த சிறுமி கைக்குழந்தையுடன் மீட்பு.! காதல் மன்னன் அதிர்ச்சி தகவல்.!!

Summary:

தென்னிந்தியா முழுவதும் பள்ளி சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி ஜிம் மாஸ்டர் என்ற காதல் மன்னன் சுற்றித்திரிந்து, சிறுமியை தாயாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

தர்மபுரியை சேர்ந்த சிறுமி 15 வயதாக இருக்கையில் காதலனால் கடத்தி செல்லப்பட்ட நிலையில், ஒன்றரை வருடம் கழித்து கைக்குழந்தையுடன் மீட்கப்பட்டுள்ளார். 5 மாநிலங்களில் சுற்றித்திரிந்த காதல் ஜோடியை, துப்புதுலக்கி தர்மபுரி காவல் துறையினர் கைது செய்ததை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிக்குப்பத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 28). இவர் ஜிம் மாஸ்டராக இருந்த வரும் நிலையில், இவருக்கு இரண்டு திருமணங்கள் நடந்து முடிந்து, 2 மனைவிகளும் குடும்ப தகராறால் பிரிந்து சென்றுள்ளனர். இதனால் நரசிம்மன் பெங்களூரில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் மதிகோன்பாளையத்தை சார்ந்த 15 வயது சிறுமியுடன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக பழகியுள்ளார். சிறுமி பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா ஊரடங்கின் போது நரசிம்மன் - சிறுமி இடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அது காதலாக மாறியுள்ளது. நரசிம்மன் மாணவியை திருமணம் செய்வதாக கூறி, கடந்த 2020 அக். மாதம் 5 ஆம் தேதி பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தர்மபுரிக்கு வந்து, சிறுமியிடம் பேசி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். வெளியே சென்று வருவதாக கூறி சென்ற மகள் மீண்டும் வீட்டிற்கு வராததால், பெற்றோர்கள் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தர்மபுரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கு விசாரணை மந்தப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி, 6 மாதத்திற்குள் சிறுமியை கண்டறிந்து பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். சிறுமியை கண்டறிய தர்மபுரி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் சிறுமியை ஜிம் மாஸ்டர் நரசிம்மன் கடத்தி சென்றது உறுதியாகவே, நரசிம்மனின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்த்தில், அவர் பெங்களூர், சென்னை, கேரளா, விசாகப்பட்டினம் போன்று பல்வேறு ஊர்களுக்கு சென்றது தெரியவந்தது. இதனால் சிறுமியும் நரசிம்மனுடன் இருப்பது உறுதியாகவே, முதலில் தர்மபுரியில் இருந்து கோவை வழியாக கேரளாவில் உள்ள திருச்சூருக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

திருச்சூருக்கு செல்லும் போதே சிறுமியின் கழுத்தில் தாலிகட்டி நரசிம்மன் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருச்சூர் மற்றும் கொச்சியில் இருவரும் சில வாரங்கள் தங்கி இருந்துள்ளனர். அதன்பின்னர், இருசக்கர வாகனத்திலேயே கர்நாடகா சென்று, அங்கு வேலை கிடைக்காத காரணத்தால் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு சென்று வாழ்ந்துள்ளனர். அங்கு வைத்து சிறுமி கர்ப்பமாகவே, திருப்பதியில் உள்ள வங்கியில் நகையை ரூ.70 ஆயிரத்திற்கு அடமானம் வைத்து, அந்த பணமும் செலவானதால் நரசிம்மன் செல்போன் திருட்டில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டபோது காவல் துறையினர் வசம் சிக்கியதை தொடர்ந்து, திருப்பதியில் அடகு வைத்த நகையை திருப்பி நெல்லூர், குண்டூர், விஜயவாடா, விசாகபட்டினத்தில் தங்க தொடங்கியுள்ளனர். கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் சிறுமியின் பிரசவத்திற்காக இருவரும் சென்னை வந்த நிலையில், பள்ளிக்கரணையில் ஆன்லைன் மூலமாக சூதாட கடையில் பணப்பரிவர்த்தனை செய்து, கடையின் உரிமையாளரை நம்ப வைத்து ரூ.1.2 இலட்சம் மோசடியும் நடந்துள்ளது. 

சென்னையில் வைத்து மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துவிட, இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவுக்கு சென்றுள்ளனர். அங்கு பிழைக்க வழி கிடைக்காமல் தவித்து, பின்னர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்காரெட்டி மாவட்டம் இஸ்னாபூர் கிராமத்தில் தங்கியிருந்துள்ளனர். திருப்பதியில் நகையை அடகு வைத்த போது குறிப்பிடப்பட்ட செல்போன் நம்பரை வைத்து காவல் துறையினர் பின்தொடர, இஸ்னாபூருக்கு அதிகாரிகள் செல்கையில் நரசிம்மன் சிறுமியுடன் தப்பி சென்றுள்ளார்.

காவல் துறையினர் எப்படியும் தன்னை கைது செய்திடுவார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொண்ட நரசிம்மன், சொந்த ஊரான பொம்மிக்குப்பத்திற்கு வந்துள்ளார். இந்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவரவே, தனிப்படை காவல் துறையினர் நரசிம்மனை கைது செய்தனர். சிறுமி 6 மாத கைக்குழந்தையுடன் மீட்கப்பட்டார். நரசிம்மன் கர்நாடக பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் மாநிலம் மாநிலமாக பயணம் செய்து வந்துள்ளார். சிறுமியுடன் நரசிம்மன் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்துள்ளார். 

இவ்வாறு பல்வேறு இடங்களுக்கு சென்றாலும், அங்கு 3 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு மேல் தங்குவது இல்லை. இவ்வாறாக கடந்த ஒன்றரை வருடமாக தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே சிறுமியுடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். தற்போது வரை செலவுக்கு என 150 செல்போன் திருட்டு, 1 இருசக்கர வாகன திருட்டிலும் நரசிம்மன் ஈடுபட்டு இருக்கிறார். மொத்தமாக நரசிம்மன், சிறுமி சேர்ந்து 2000 கி.மீ தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். 

காவல் துறையினரால் மீட்கப்பட்ட சிறுமி தர்மபுரி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட நரசிம்மன் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். வாழ்க்கை என்றால் என்னவென்று கூட புரியாமல் இருந்த பருவத்தில், ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் வாங்கி கொடுத்த செல்போனை வைத்து 2 திருமணம் ஆன வாலிபருடன் காதல் வயப்பட்டு, அவருடன் தென்னிந்தியாவை இருசக்கர வாகனத்தில் சுற்றி கைக்குழந்தையுடன் திரும்பிய அதிர்ச்சி பெற்றோர்களை அதிர வைத்துள்ளது.


Advertisement