இரயில் பயணத்தில் குரங்கு வித்தை.. மின்கம்பியில் மோதி கீழ்பாக்கம் கல்லூரி மாணவன் சாவு.!Chennai ot Thiruvallur Sub Urban Electric Train College Student Died Perambur Hit Steel Pole

திருவள்ளூர் நோக்கி சென்ற புறநகர் மின்சார இரயிலில் படியில் நின்றபடி வித்தைகாட்டி பயணித்த கல்லூரி மாணவன், மின்சார கம்பியில் மோதி உயிரிழந்தான்.

சென்னை புறநகர் மின்சார இரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரகளை, ஆபத்தான சாகசங்களை மேற்கொள்வது என பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த இரயில்வே காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தாலும், அதிகாரிகள் பார்வையை கடந்ததும் சில்வண்டுகள் தங்களின் சேட்டைகளை தொடங்குகிறது. 

இவ்வாறான சேட்டைகள் ஒருநொடியில் உயிரை பறிக்கும் என்பதை கூட புரிந்துகொள்ள இயலாமல், கெத்துக்காக செய்கிறோம் என பல துயரங்கள் நடந்து வருகிறது. இவர்களை காவல் துறையினர், பொதுமக்கள் என யார் கண்டித்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருகின்றனர்.

கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கல்லூரி மாணவர்கள் 20 பேர் குழுவாக சென்ட்ரல் இரயில் நிலையம் சென்ற நிலையில், இவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் புறநகர் இரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த கும்பலில் பேரம்பாக்கம், கடம்பத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 19) என்ற மாணவரும் பயணித்துள்ளார். 

chennai

இவர் கல்லூரியில் பி.ஏ 2 ஆம் வருடம் பயின்று வரும் நிலையில், சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்த படியில் தொங்கி பயணம் செய்துள்ளனர். இரயில் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகே சென்றபோது, படியில் தொங்கிக்கொண்டு சென்ற மாணவன் வெங்கடேசன் தண்டவாளம் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி இருக்கிறார்.

இந்த துயர சம்பவத்தில் இரயிலில் இருந்து வெங்கடேசன் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவருடன் இருந்த மாணவர்களில் விஜய் என்பவர் நண்பனை காப்பாற்ற ஓடும் இரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனைக்கண்டு பதறிப்போன பயணிகள் இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இரயில் பெரம்பூர் இரயில் நிலையத்தில் நின்றதும் நண்பர்கள் அங்கிருந்து கூட்டமாக கீழே விழுந்த 2 பேரை நோக்கி ஓடி வந்துள்ளனர்.

தகவல் அறிந்து ஏற்கனவே விரைந்த பெரம்பூர் இரயில்வே காவல் துறையினர் இருவரையும் மீட்டு அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், மாணவன் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். விஜய் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.