அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலையால் அசௌகரியம்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலையால் அசௌகரியம்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai IMD Announce Heat wave in TN Next 5 Days 1 april 2024 

 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மற்றும் கரூர் பகுதியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான முன்னறிவிப்பை பொறுத்தமட்டில் தென்னிந்திய பகுதியில் மேல், வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு பகுதி நிலவுகிறது. 

இதனால் ஒன்றாம் தேதி இன்று தென் தமிழகத்தில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். இரண்டாம் தேதியை பொறுத்தமட்டில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் வறண்ட வானிலை நிலவும். 

மூன்றாம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி - காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் சென்னையில் காணப்படும், நகரின் சில பகுதிகளில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசம் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.