அடாவடி செய்த அரசு பஸ் கண்டக்டர்: வைரலாக பரவிய வீடியோ..! சீட்டை கிழித்த நிர்வாகம்..!

அடாவடி செய்த அரசு பஸ் கண்டக்டர்: வைரலாக பரவிய வீடியோ..! சீட்டை கிழித்த நிர்வாகம்..!


bus conductor who abused a disabled person went viral

திருப்பூரில் அரசுப் பேருந்தில் இருந்து மாற்று திறனாளியை இறக்கிவிட்ட விவகாரத்தில் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசிப்பவர் சத்தியராஜ். இவர் பானிபூரி விற்பனை செய்து வருகிறார். பார்வை குறைபாடுடைய சத்தியராஜ்க்கு, அரசு சார்பில் பஸ்ஸில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்கப்பட்டுள்ளது. சத்தியராஜ், அவரது மனைவி மற்றும் மகன் சிபிராஜ்(17) ஆகியோருடன், வீரபாண்டியில் இருந்து திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி இருக்கிறார். பஸ் கண்டக்டர் முத்துக்குமார் டிக்கெட் எடுக்க சொல்லி உள்ளார், அப்போது மனைவிக்கு பெண்கள் பேருந்தில் கட்டணம் இல்லை என்பதால் தன்னுடன் வந்த தனது மகனுக்கு இலவச பாஸ் செல்லும் என கூறியுள்ளார்.

அதனை ஏற்க மறுத்த பஸ் கண்டக்டர், சத்தியராஜுடன் அவரது மனைவிக்கு மட்டுமே பாஸ் செல்லும் எனவும், அதனால் அவரது மகனுக்கு தனியே டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார். இதற்கு சத்தியராஜ் மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கண்டக்டர் முத்துக்குமார் சத்தியராஜை குடும்பத்துடன் பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். இதை வீடியோ எடுத்த சத்தியராஜின் மகனையும் அவர் தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சத்தியராஜ், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளி சத்தியராஜ் உடன் பஸ் கண்டக்டர் முத்துக்குமார் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளியை குடும்பத்துடன் பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்ட விவகாரத்தில் கண்டக்டர் முத்துக்குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, திருப்பூர் மாவட்ட போக்குவரத்து பொது மேனேஜர் உத்தரவிட்டுள்ளார்.