பட்டப்பகலில் பரபரப்பான ரோட்டில் மாணவியை கடத்த முயற்சி: மாணவி செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி..!an-attempt-was-made-to-abduct-a-student-on-a-busy-road

சென்னை, தண்டையார் பேட்டை கிராஸ்ரோடு பகுதியை சேர்ந்த மாணவி (14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று அந்த மாணவி பள்ளி செல்வதற்காக வழக்கம் போல் அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கெனவே 25 வயது மதிக்கதக்க 2 இளைஞர்கள் பயணம் செய்து வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தண்டையார் பேட்டை டோல்கேட்டில் இருந்து தங்கசாலை வரை செல்வதற்காக பயணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவியின் வாயில் கர்சீப்பை வைத்து மூடி, அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர். இதற்கிடையே சட்டென சுதாரித்துக்கொண்ட மாணவி, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆட்டோ ஓடிக் கொண்டிருந்த போதே கீழே குதித்துள்ளார்.

ஓடிய ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததால், மாணவியின் மூக்கு, தாடை போன்ற பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், கீழே விழுந்து கிடந்த மாணவியை தூக்க முயற்சி செய்த நேரத்தில், ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர்.

இதனையடுத்து அங்கு கூடிய மக்கள், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின்அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிகிச்சைக்கு பின்னர் மாணவியிடமும், ஆட்டோ ஓட்டுனரிடமும்  இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.