திரைப்படத்தையும் மிஞ்சும் திக்.. திக்.. காட்சிகள்! குழந்தையின் உயிரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்களின் துணிச்சல் சம்பவம்

திரைப்படத்தையும் மிஞ்சும் திக்.. திக்.. காட்சிகள்! குழந்தையின் உயிரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்களின் துணிச்சல் சம்பவம்



ambulance drivers saved a boy baby

திருச்சியில் பிறந்த பிஞ்சுக் குழந்தையின் உயிரை காப்பாற்ற நான்கு மணிநேரத்தில் சென்னையை அடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர்; அவருக்கு துணையாக இருந்த 30 ஆம்புலன்ஸ்கள்; குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க நன்றி; என பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நேற்று மாலை திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் அரங்கேறியது.

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குணாளன் - கிருஷ்ணவேணி தம்பதியினருக்கு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது. இவர்களுக்கு இதுதான் முதல் குழந்தை. ஆபரேஷன் செய்து பிறந்த அந்த குழந்தைக்கு இரண்டு மணி நேரத்தில் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக குழந்தையானது மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

காலை 9 மணியளவில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனடியாக சென்னைக்கு சென்று உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என கூறுகின்றனர். மேலும் தாமதப்படுத்தாமல் குழந்தையை அங்கு அழைத்துச் சென்றால் குழந்தையின் உயிரை காப்பாற்றி விடலாம் எனவும் கூறுகின்றனர். வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மயக்க நிலையில் இருந்த தாய் கிருஷ்ணவேணிக்கு இந்த சம்பவம் எதுவுமே தெரியாது.

ambulance drivers saved a boy baby

குழந்தையை வெண்டிலேட்டரில் வைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு வசதியான ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. நீண்ட நேர முயற்சிக்குப் பின் மணப்பாறையில் உள்ள அலெக்சாண்டர் என்பவரின் ஆம்புலன்ஸ் இந்த வசதியை கொண்டுள்ளது என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி அவரை தொடர்பு கொண்டவுடன் சரியாக 2:30 மணிக்கு மணப்பாறையிலிருந்து திருச்சிக்கு கிளம்புகிறார் அலெக்சாண்டர். 

மருத்துவமனைக்கு வந்த அலெக்சாண்டரிடம் மருத்துவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக குழந்தையை சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டால் குழந்தையின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என தெரிவிக்கின்றனர். இதனை கேட்ட அலெக்சாண்டர் 330 கிலோமீட்டர் தூரத்தை எப்படி சுலபமாக கடந்து செல்வது என்பதை பற்றி யோசனை செய்கிறார். என்நேரமும் பரபரப்புடன் செயல்படும் திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல முடியும். மேலும் மாலை நேரத்தில் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த சூழலில் 4 மணி நேரத்தில் சென்னையை எப்படி கடக்க வேண்டும் என்பதை திட்டமிடுகிறார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்சாண்டர்.

ambulance drivers saved a boy baby

மாநில ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணை செயலாளர் இலியாஸ்,  ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருக்கிற மூன்று வாட்சப் குரூப்களில் குழந்தை குறித்த  தகவலை ஆடியோ வடிவில் பகிர்ந்துகொள்கிறார். இந்த தகவலை பெற்ற திருச்சி முதல் சென்னை நெடுஞ்சாலையில் இருக்கிற அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒரு குழுவாக இணைகின்றனர். திருச்சி முதல் சென்னை வரை உள்ள பகுதிகளை பல எல்லைகளாக பிரிக்கின்றனர். ஒவ்வொரு எல்லைக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பொறுப்புகளை ஏற்கின்றனர்.

சரியாக 4:10 மணிக்கு ஆம்புலன்ஸ் திருச்சி மருத்துவமனையில் இருந்து புறப்படுகிறது. வெண்டிலெட்டரில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ஆம்புலன்ஸின் உள்ளே குணாளனின் உறவினரும் மற்றொரு ஆம்புலன்ஸ் ஊழியரான ஸ்ரீதரனும் குழந்தையை கண்காணித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அலெக்சாண்டரின் அருகில் குழந்தையின் தந்தை அமர்ந்து கொள்கிறார். குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் கிளம்புவதற்கு முன் தயாராக இருந்த மற்ற நான்கு ஆம்புலன்ஸ்கள் சாலையின் முன்பே சென்று வழிகளை ஆயத்தப்படுத்துகின்றன. எல்லா ஆம்புலன்ஸ்களும் ஒலிபெருக்கி இருப்பதால் சாலையில் இருந்த வாகன ஓட்டிகள் வழியை விட்டு ஒதுங்குகின்றன.

ambulance drivers saved a boy baby

சாலையில் தனக்கான வழி ஒதுக்கப்பட்டதும் ஆம்புலன்சின் வேகத்தை கூட்டுகிறார் ஓட்டுநர் அலெக்சாண்டர். வாகனம் குலுங்கினாள் குழந்தைக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அலெக்சாண்டர் வண்டியை மிகவும் நேர்த்தியாக ஓட்ட தொடங்குகிறார் அலெக்சாண்டர். அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நான்கு ஆம்புலன்சுகளும் திருச்சி சுங்கச்சாவடி உடன் நின்று விடுகின்றன. அங்கு தயாராக இருந்த தொழுதூரை சேர்ந்த மற்ற இரண்டு ஆம்புலன்சுகளும் அவருக்கு துணையாக சாலையை ஒழுங்குபடுத்தி செல்ல தயாராகின்றனர். 

தொழுதூரிலிருந்து சாலையை சீரமைத்து வந்த இரண்டு ஆம்புலன்சுகளும் விழுப்புரம் எல்லையை தொட்டதும் ஒதுங்கி விடுகின்றனர். விழுப்புரத்தில் இருந்து வந்த மற்ற இரண்டு ஆம்புலன்ஸ்கள் தங்களது பொறுப்பை ஏற்கின்றனர். அவர்கள் விழுப்புரம் எல்லையை தாண்டி திண்டிவனத்தை நெருங்கும் வரை சாலையை ஒழுங்குபடுத்தி செல்கின்றனர். இவர்களோடு விழுப்புரத்தில் இணைந்த மேலும் 5 ஆம்புலன்சுகளும் இவர்களுக்கு துணையாக முன்னே சென்று கொண்டிருக்கின்றன. 

ambulance drivers saved a boy baby

திண்டிவனம் வரை சென்ற அந்த 7 ஆம்புலன்ஸ்களும் தங்களது கடமையை சிறப்பாக நிறைவேற்றி முடிக்க, செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் வந்த மற்ற 3 ஆம்புலன்ஸ்கள் தங்களது பணியை தொடர ஆரம்பிக்கின்றன. அவர்கள் செங்கல்பட்டை வந்தடையும்போது வேறு நான்கு ஆம்புலன்ஸ்கள் அவர்களோடு சேர்ந்து கொள்கின்றன. சென்னையை நெருங்க நெருங்க போக்குவரத்து நெரிசல் அதிகமாக துவங்குகின்றது.

இந்நிலையில் கூடுவாஞ்சேரியில் தயாராக இருந்த மேலும் 5 ஆம்புலன்சுகளும் இவர்களோடு சேர்ந்து சாலையை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் களமிறங்குகின்றனர். குழந்தையை சுமந்து வரும் ஆம்புலன்ஸ் எந்த காரணத்தை கொண்டும் நின்றுவிடக் கூடாது என்ற தகவல் வாட்ஸ்அப் மூலம் அனைத்து ஓட்டுநர்களுக்கும் அனுப்பப்படுகிறது. எனவே 10 ஆம்புலன்சுகளும் வரிசையாக ஒலி எழுப்பியபடி கடந்து செல்லும் சத்தத்தை கேட்ட வாகன ஓட்டிகள் பதற்றமடைந்து சாலையின் ஓரமாக ஒதுங்க துவங்குகின்றனர்.

ambulance drivers saved a boy baby

சென்னை நகருக்குள் நான்கு கிலோ மீட்டருக்கு ஓர் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி என மொத்தம் 15 ஆம்புலன்ஸ்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்க சரியாக 8:20-க்கு அண்ணா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை இருக்கும் ஆம்புலன்சை நிறுத்துகிறார் ஓட்டுநர் அலெக்சாண்டர். சரியாக 4 மணி, 10 நிமிடங்களில் எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் குழந்தையை கொண்டு வந்து சேர்த்த ஓட்டுநர் அலெக்சாண்டருக்கு குழந்தையின் தந்தை குணாளன் ஓட்டுனர் அலெக்சாண்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், 'இதயத்தில் எந்த அடைப்பும் இல்லை' எனவும்,  'நுரையீரல் பகுதியில் பிரச்சனை இருப்பதாகவும்' தெரிவித்தார்கள். 'சிகிச்சையளிக்க பல லட்சங்கள் செலவாகும்' என்றதால், இரண்டு மணி அடிப்படைச் சிகிச்சைகளுக்குப் பிறகு இரவு 10 மணிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்படுகிறது. அங்கு வென்டிலேட்டரில் வைத்து குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.