இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதர்! கொரோனா சமயத்திலும் அயராது உழைத்து உதவும் ஆலங்குடி 515 கணேசன்!alangudi-515-ganesan-helping-to-public

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களைத் தனது காரில் இலவசமாக அழைத்துச் சென்று அவர்களுக்குத் தொடர்ந்து உதவி வருகிறார் ஆலங்குடியைச் சேர்ந்த 515 கணேசன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் எஸ்.கணேசன். 68 வயது நிரம்பிய இவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

40 வருடங்களுக்கு முன்பு ஆலங்குடியில் வாடகை கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், எந்த காரிலும் இறந்தவர்களின் சடலங்களை ஏற்றிச் செல்வதில்லை. இதனால், சமூக அக்கறை கொண்ட கணேசன் ஒரு காரை விலைக்கு வாங்கினார். அந்தக் காரின் பதிவு எண் 515. சடலங்களை ஏற்றிச் செல்ல முடியாமல் தவித்த ஏழை எளியோருக்காக தனது காரை இலவசமாக பயன்படுத்த முன்வந்தார் கணேசன். மேலும், அநாதை சடலங்களை தானே தூக்கிச் சுமந்து காரில் ஏற்றி உதவியுள்ளார்.

Ganesan

இதனையடுத்து அவர்  '515' கணேசன் என்றே அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டார் கணேசன். ஊரடங்கு நேரத்தில் தற்போது மருத்துவ உதவிக்காக, யார் எப்போது அழைத்தாலும், கணேசனின் கார் விரைந்து வந்து நிற்கிறது. 68 வயதான கணேசனின் இந்த இடைவிடாத முயற்சிக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இவர் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி என்று பல இடங்களுக்கு மருத்துவத்திற்கு பொதுமக்களைக் அழைத்துச்சென்றுள்ளார். இவரது சேவையைப் பாராட்டி, பெங்களூருவில் உள்ள பாரத் விர்ச்சுவல் பல்கலைக்கழகம் இரண்டு வருடங்களுக்கு முன்பு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.