சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் புகார் கொடுத்த அதிமுக அமைச்சர்கள்.!

சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் புகார் கொடுத்த அதிமுக அமைச்சர்கள்.!



admk minister complaint on Sasikala

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, சசிகலாவை அழைத்து செல்ல தனியாக கார் தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த காரின் முகப்பில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலா அவர்கள் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சென்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஜனவரி 8ம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் வரவுள்ளார். இந்நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் புகாரளித்தனர். 

அவர்கள் அளித்த புகாரில், அதிமுக கொடியை சசிகலா இனி பயன்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர்கள், அதிமுக கொடியை சசிகலா மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை காவல்துறை மூலம் அவருக்கு தெரிவிக்கவே டிஜிபியிடம் புகார் அளித்து இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.