கல்லூரி மாணவர்கள் சென்ற டூ-வீலர் மீது பயங்கரமாக மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்..!

கல்லூரி மாணவர்கள் சென்ற டூ-வீலர் மீது பயங்கரமாக மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்..!


A car crashes into a two-wheeler carrying college students: one killed and one seriously injured

திருப்பூர் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சந்தீப் குமார் (21). திருப்பூர், வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணி. இவரது மகன் சக்தி சரண் (21). இவர்கள் இருவரும் கோவையில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் பி.இ இறுதியாண்டு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூரிலிருந்து கோவை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை சக்தி சரண் ஓட்டியுள்ளார். பின் இருக்கையில் சந்தீப் குமார் அமர்ந்திருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் அவிநாசியை அடுத்த தெக்கலூர் பகுதியில் சென்றது.

அப்போது அதே திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, இவர்களின் மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது. எதிர்பாராத இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் சந்தீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது அந்த வழியாக வந்தவர்கள் படுகாயமடைந்த சக்தி சரணை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து  குறித்து அவினாசி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.