சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த 20 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தடாலடி..!

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த 20 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தடாலடி..!


a-20-year-old-man-who-kidnapped-and-raped-a-girl-was-se

திருவண்ணாமலை மாவட்டம், மேல்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தன் (22). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று 7 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சுகந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சுகந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சுகந்தனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போக்சோ சட்ட பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த  குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.