தமிழகம்

மீண்டுமொரு கொடூரம்! மிருகத்தனமாக கொல்லப்பட்டு, தண்ணீர் டிரம்மில் திணித்து வீசப்பட்ட 7 வயது சிறுமி! இளைஞர்கள் இருவர் கைது!

Summary:

7 year girl murdered in satthankulam

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்விளை என்ற கிராமத்தில் ஓடைபாலம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர். அப்பொழுது அங்கிருந்து சிறிது தூரத்தில் இருந்த தண்ணீர் டிரம் ஒன்றிலிருந்து மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அதனுள்ளே 7 வயது சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்டு பயந்துபோன அவர்கள் இதுகுறித்து ஊருக்குள் சென்று கூறிய நிலையில் அனைவரும் அங்கு விரைந்து பார்த்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அந்த 7 வயது சிறுமி இந்திராநகரைச் சேர்ந்த சேகர் மற்றும் உச்சிமாகாளி தம்பதிகளின் மகள் எனவும், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உச்சிமாகாளி கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் உச்சிமாகாளி கூலி வேலைக்காக சென்ற நிலையில், அந்த சிறுமி அதே தெருவில் உள்ள முத்து ஈஸ்வரன்  என்ற இளைஞரின் வீட்டிற்கு டிவி பார்க்க சென்றதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் அந்த இளைஞரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய நிலையில்,  அவர் தானும், தனது நண்பர் நந்தீஸ்வரன் என்பவரும் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின் அதனை தண்ணீர் டிரம்மில் போட்டு காட்டுபகுதியில் இருந்த ஓடை பக்கத்தில் வைத்துவிட்டு வந்ததாக கூறியுள்ளார். 

அதனை தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.மேலும் சிறுமியின் உடலில் இரத்தகாயங்கள் இருந்தநிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.


Advertisement