தானாக ஓடிய லாரியால் விபரீதம்: சாலையோரம் விளையாடிய 4 வயது சிறுவன் பரிதாப பலி..!

தானாக ஓடிய லாரியால் விபரீதம்: சாலையோரம் விளையாடிய 4 வயது சிறுவன் பரிதாப பலி..!


4-year-old boy who was playing on the side of the road was tragically killed by a truck that ran over him

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நீலிபாளையம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் ரித்விக் (4). நீலிபாளையம் கூட்ரோடு பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. இதன் காரணமாக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முனியப்பன் கோவிலை சுத்தம் செய்வதற்காக நேற்று தண்ணீர் லாரி வரவழைக்கப்பட்டது. அதன்படி தனியாருக்கு சொந்தமான லாரி ஒன்று தண்ணீரை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்தது. லாரியை நிறுத்திய ஓட்டுநர், அது நகராமல் இருக்க சக்கரங்களின் அடியில் முட்டு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில், முனியப்பன் கோவிலின் அருகே சாலையோரத்தில் ரித்விக் உள்ளிட்ட ஏராளமான சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரி திடீரென தானாக முன் பக்கமாக நகர்ந்துள்ளது. இதனை கவனிக்காமல் சாலையோரத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் ரித்விக் மீது லாரி மோதியது.  இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக மற்ற சிறுவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுமுகை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த ரித்விக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரித்விக்கின் தந்தை சக்தி சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், லாரி ஒட்டுநர் கருணாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.