கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உட்பட 2 பேர் பலி: விநாயகர் சதுர்த்தி நாளில் பரிதாபம்..!

கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உட்பட 2 பேர் பலி: விநாயகர் சதுர்த்தி நாளில் பரிதாபம்..!



2-people-including-a-boy-were-killed-when-the-temple-wa

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை அருகேயுள்ள எட்டித்துறை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அந்தப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்துவருகிறது. இதனால் அதே பகுதியை சேர்ந்த நடராஜ் (50), ஹரி (13), பிரபு (35) நித்திஷ் (11) மற்றும் நிர்மல் (14) ஆகிய 5 பேரும் மழையில் நனையாமல் இருக்க கோவில் அருகே ஒதுங்கி நின்றனர்.

அப்போது திடீரென கோவிலின் பக்கசுவர் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக அங்கே நின்றுகொண்டு இருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சுவரின் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் ஆனைமலை காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஹரி (13) மற்றும் நடராஜ் (50)  ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மூவரும் படுகாயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த ஹரி மற்றும் நடராஜ் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.