பாலத்தின் நடுவே பயங்கரமாக மோதிய பேருந்துகள்: குழந்தைகள் உட்பட 12 பேர் கவலைக்கிடம்..!12 people, including children, were injured when the bus collided in the middle of the bridge

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து ஒன்றும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்றும் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடுவே மோதி விபத்துக்குள்ளானது.

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த கோர விபத்தில், 2 பேருந்துகளின் ஓட்டுனர்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கும், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை பெய்த மழையால் பாம்பன் பாலத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக, பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் குழந்தைகள் உட்பட 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.