விளையாட்டு

ஜாம்பவான் சச்சின் சாதனையை நெருங்கிய ஒரே இந்திய வீரர் இவர் தான்; என்ன சாதனை தெரியுமா?

Summary:

world cup 2019 - sachin - rohit sharma - record

கடந்த மாதம் மே 30ஆம் தேதி தொடங்கிய 12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பே முன்னாள் கிரிக்கட் பிரபலங்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் இங்கிலாந்து அணி அல்லது இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே அரையிறுதிக்கு முன்னேறிய நான்கு அணிகளில் இந்திய அணியும் ஒன்றாக விளங்கியது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்த்த நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் நேற்றைய உலக கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.

நேற்றைய ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் 15-15 ரன்களால் டையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து அதிக நான்குகள் (24/16) அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதற்கிடையில் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா ( 648 ரன்கள்) முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (647 ரன்கள்) இரண்டாவது இடம் பிடித்தார். ஆனால், ஒரே உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் சச்சினின் (673 ரன்கள், 2003) சாதனையை ரோகித் சர்மா தகர்க்க தவறினார்.

ஆனால், ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிகரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் இடம் பெறுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக கடந்த 1996, 2003ல் சச்சின் முதலிடம் பிடித்திருந்தார்.


Advertisement