இந்திய அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் புதிய சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா அணி.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதற்கு முன்பாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி சேஸ் செய்த மிக பெரிய இலக்கு 208 ரன்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் சேஸ் செய்ததே அந்த அணியின் சாதனையாக இருந்தது. இந்த நிலையில் நேற்றய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.