இந்தியா விளையாட்டு

ஒரு வழியா 2வது இடம் பிடித்த பெங்களூரு; ஷாக் ஆகிட வேண்டாம் கடைசியிலிருந்து இரண்டாவது.!

Summary:

ipl 2019 - rcb - points table - change - 7th place

ஐபிஎல் 12ஆவது சீசன் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற 42 ஆவது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வின் செய்த பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதன்படி பெங்களூரு அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் பட்டேலும் விராட் கோலியும் களமிறங்கினர். ஆனால் துவக்கத்திலேயே விராட் கோலி தனது விக்கெட்டை இழந்து 13 ரன்களோடு வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஷும் பட்டேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினர். குறிப்பாக பட்டேல் அதிரடியாக ரன்களை குவிக்க துவங்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பிறகு களமிறங்கிய மொயீன் அலி, அக்ஷ்தீப் நாத் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் பெங்களூரு அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. இந்நிலையில் டிவிலியர்ஸுடன் இணைந்த மார்க் ஸ்டானிஸ் அணியின் எண்ணிக்கையை உயர்த்த போராடினார். கடைசி கட்டங்களில் இருவரும் இணைந்து பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

19 ஆவது ஓவரை சந்தித்த டிவிலியர்ஸ் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். தனது பங்குக்கு 20 ஓவரை சந்தித்த ஸ்டானிஸும் பந்துகளை சிக்சர்களாகவும் பவுண்டரிகளாக மாற்றினார். கடைசி 2 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 48 ரன்களை குவித்தது. முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை குவித்தது. டிவிலியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களையும் மார்க் ஸ்டானிஸ் 34 பந்துகளில் 46 ரன்களையும் குவித்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தனர்.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் வீரர்கள் ஆரம்பம் முதல் அதிரடியாக ரன்களை குவித்து தொடங்கினர். இதனால் அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகவும் போராடி பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. அந்த அணி வீரர்களான கேஎல் ராகுல் 27 பந்துகளில் 42 ரன்களையும் நிக்கோலாஸ் பூரான் 28 பந்துகளில் 46 ரன்களையும் குவித்தனர்.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து கடைசி இடத்தில் இருந்த பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கடைசியில் இருந்து இரண்டாவது இடத்தை பிடித்தது. அதாவது, இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள பெங்களூரு 7 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தை பிடித்தது.


Advertisement