உப்பு சப்பில்லாமல் முடிந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி: மீண்டும் மோத வாய்ப்புள்ளதா..?!!

உப்பு சப்பில்லாமல் முடிந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி: மீண்டும் மோத வாய்ப்புள்ளதா..?!!



india-pakistan-match-canceled-due-to-rain

மழையால் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் ரத்தானதால் ரசிகர்கள் சோகம்.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை அடித்து நொறுக்கியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற  2 வது லீக் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்க தேச அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில் தொடரின் 3 வது லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் உள்ள பல்லகலே மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதன் படி, இந்திய அணியின் இன்னிங்ஸை கேப்டன் ரோஹித் சர்மா-சுப்மன் கில் ஜோடி துவங்கியது. ரோஹித் சிறிது அதிரடியாக ஆட, சுப்மன் கில் ஆமை வேகத்தில் விளையாடி வெறுப்பேற்றினார். மழைக்கு முன்பாக நன்கு விளையாடிய ரோஹித் மழைக்கு பின்பு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரன் மெஷின் விராட் கோலி 7 பந்துகளை சந்தித்து 4 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாட முயற்சித்து 9 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து, ஒரு ஷார்ட் பிட்ச் பந்துக்கு இரையானார். இதன் பின்னர் இணைந்த இஷான் கிஷன்-ஹர்திக் பாண்டியா ஜோடி நிதானமாகவும் அதே நேரத்தில் தவறான பந்துகளை தண்டித்தும் விளையாடி இந்திய இன்னிங்ஸை வளர்த்தனர்.

இஷான் கிஷன்-ஹர்திக் பாண்டியா இருவருமே அரைசதம் விளாசி நம்பிக்கை அளித்த நிலையில், இஷான் கிஷன் 82 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 87 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த ஜஸ்பிரிட் பும்ரா 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். 48.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 266 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் மூன்றாவது முறையாக குறுக்கிட்ட மழையால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து போட்டியை ரத்து செய்த நடுவர்கள், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளியை வழங்கினர். இந்திய அணி தனது அடுத்த லீக் போட்டியில் நேபாள அணியை சந்திக்கிறது. 

இந்த நிலையில், இவ்விரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளதால் மீண்டும் ஒரு முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அனல் பறக்கும் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.