மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
வடை போச்சே..!! தகுதிச்சுற்றில் ஏமாந்த மும்பை ரசிகர்கள் கலக்கம்..!!
மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், லீக் போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளன. புள்ளிகளின் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய ப்ளே-ஆப் சுற்றின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் பின்னர் நடைபெற்ற எலிமினேட்டர் என்கிற வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடிய மும்பை அணி 2 வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2 வது தகுதி சுற்று போட்டியில் குஜராத்-மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா-சுப்மன் கில் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது.
விருத்திமான் சஹா 18 ரன்களுடன் ஆட்டமிழக்க, சாய் சுதர்சனுடன் கைகோர்த்த சுப்மன் கில் சரவெடியாய் வெடிக்க 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டை இழந்த குஜராத் அணி 233 ரன்கள் குவித்தது. 60 பந்துகளை சந்தித்த சுப்மன் கில் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது நடப்பு தொடரில் சுப்மன் கில் விளாசிய 3 வது சதமாகும். சாய் சுதர்சன் 43 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து, 234 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா-நேஹல் வதேரா ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. வதேரா 4 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 43 ரன்னிலும், கேமரூன் கிரீன் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர் களமிறங்கி வெற்றிக்காக போராடிய சூர்யகுமார் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விஷ்னு வினோத் 5, டிம் டேவிட் 2, ஜோர்டன் 2 ரன்னிலும், சாவ்லா 0 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 171 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
குஜராத் அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய மொஹித் சர்மா 2.2 ஓவர்களில் 10 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு அடித்தளமிட்டார்.வரும் 28 ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் குஜராத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.