பிரம்மாண்ட ரன் குவிப்பால் பிரமிக்க வைத்த சி.எஸ்.கே..!! முதல் பாதியிலேயே தோல்வியை தழுவிய டெல்லி கேப்பிடல்ஸ்..!!Chennai Super Kings have accumulated runs for the loss of wickets in the important match against Delhi Capitals.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்புக்கு ரன்கள் குவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 66 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. டெல்லியில் இன்று நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற இந்த போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை அணியின் இன்னிங்ஸை ருதுராஜ் கெய்க்வாட்-டெவன் கான்வே ஜோடி தொடங்கியது.

இந்த ஜோடியினர் தவறான பந்துகளை தண்டித்து அதிரடியாக தொடங்கிய நிலையில், டெவன் கான்வே டெல்லி அணியை அதிகம் சோதித்தார். சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேலை 2 வது ஓவரில் களமிறக்கிய டெல்லி அணிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களின் சாதுர்யமான ஆட்டத்தால் சென்னை அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் குவித்தது.

பவர் பிளே ஓவர்களில் பீல்டர்களுக்கு எந்த வாய்ப்பையும் அளிக்காத இந்த ஜோடி, பந்துகளை தரையோடு பவுண்டரிக்கு விரட்டியது. இதன் மூலம் 6 ஓவர்களின் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய தொடக்க ஜோடியினர், சென்னை அணிக்காக ரன் வேட்டையை தொடர்ந்தனர்.

பவர் பிளேவின் முடிவில் குல்தீப் யாதவ்-அக்ஸர் பட்டேல் இணை சுழலை தொடர்ந்ததால் சென்னை அணியால் அதிரடியாக ரன்களை குவிக்க முடியவில்லை. இருந்த போதிலும் 10 வது ஓவரை வீசிய அகஸர் பட்டேலை குறிவைத்த கெய்க்வாட் அந்த ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி தனது அரை சதத்தையும் கடந்தார்.

முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் குவித்த சென்னை அணி, குல்தீப் யாதவ் 12 வது ஓவரின் 2 வது பந்தில், கெய்க்வாட்டின் சிக்ஸருடன் சதத்தை எட்டியது. அந்த ஓவரில் ஹாட்ரிக் சிகஸர்களை விளாசிய கெய்க்வாட், டெல்லி பந்து வீச்சாளர்களுக்கு கிலி ஏற்படுத்தினார். 13 வது ஓவரின் முடிவிலும் ஏறக்குறைய ஓவருக்கு 9 ரன் ரேட் என்ற கணக்கில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரன் வேட்டையை தொடர்ந்தனர்.

மொத்தம் 33 பந்துகளை சந்தித்த டெவன் கான்வே சிக்ஸருடன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இந்த தொடரில் அவருக்கு இது 6 வது அரைசதமாகும். தொடர்ச்சியாக டெல்லி பந்துவீச்சாளர்களின் மீது ஆதிக்கம் செலுத்திய இந்த ஜோடியை பிரிக்க டெல்லி அணி வகுத்த வியூகங்கள் தவிடு பொடியானது குறிப்பிடத்தக்கது.

சக்காரியா வீசிய 15 வது ஓவரின் 3 வது பந்தில் கெய்க்வாட் 79 ரன்களுடன் ஆட்டமிழந்தை தொடர்ந்து, ஷிவம் துபே களமிறங்கினார். இதன் பின்னரும் சென்னை பேட்ஸ்மேன்களின் அதிரடியை கட்டுப்படுத்த வழி தெரியாமல் டெல்லி அணி தடுமாறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மைதானத்தில் கூடியிருந்த சென்னை ரசிகர்கள் வீ வாண்ட் தோனி என்று கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில், ஷிவம் துபே 9 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தோனி களமிறங்கினார். இதற்கிடையே சிறப்பாக விளையாடிய டெவன் கான்வே 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டெல்லி அணிக்கு 224 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.