உள்ளே-வெளியே ஆட்டத்தில் சி.எஸ்.கே..!! பரபரப்பான கட்டத்தில் டெல்லியுடன் மோதல்..!!Chennai Super Kings-Delhi Capitals in the 67th match of the league today in Delhi.

டெல்லியில் இன்று நடைபெறும் 67 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 66 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. டெல்லியில் இன்று நடைபெறும் 67 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

மொத்தம் உள்ள 70 லீக் போட்டிகளில் இன்னும் 4 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் நேரடியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 3 இடங்களுக்கான போட்டியில் முறையே சென்னை, லக்னோ, பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் சென்னை அணி களமிறங்குகிறது. ஒரு வேளை தோல்வியடையும் பட்சத்தில் அடுத்து வரும் லக்னோ, மும்பை மற்றும் பெங்களூரு அணிகளின் போட்டியில் கிடைக்கும் முடிவுகளுக்காக காத்திருக்க நேரிடும். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றையை போட்டியிலும் வெற்றி பெற்று ப்ளே-ஆப் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற வேண்டும் என்பது சென்னை ரசிகர்களின் விருப்பமாக இருக்கும்.

ஏற்கனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்ட டெல்லி அணி 10 புள்ளிகளுடன் 9 இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் ஆவலில் அந்த அணி களமிறங்கும். வெற்றியுடன் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வேட்கையுடன் சென்னை அணி களமிறங்கும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியதில், சென்னை 18, டெல்லி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடைசி போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கிறது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற சென்னை அணி பல்வேறு வியூகங்களுடன் களமிறங்கும்.