விளையாட்டு WC2019

விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டு இனி இவர் தான்! கடைசி வரை போராடி கோப்பையை வென்ற பென் ஸ்டோக்ஸ்

Summary:

ben stokes the real hero to win worldcup

கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிந்தும் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் உலக கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் 24 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 86 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்தனர். பின்னர் 45-வது ஓவரில் பட்லர் ஆட்டமிழக்க அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. ஆனால் ஒரு முனையில் விடாமுயற்சியுடன் மிகுந்த நம்பிக்கையோடு ஆடினார் பென் ஸ்டோக்ஸ். கடைசி ஓவரில் வெற்றி பெற 15 ரன்கள் தேவை என்ற நிலையிலும் அதில் 14 ரன்களை அடித்து ஆட்டத்தை டை செய்ய உறுதுணையாக இருந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.

சூப்பர் ஓவரிலும் தனது பங்கிற்கு 8 ரன்களை விளாசிய பென் ஸ்டோக்ஸ் இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மிகவும் உறுதுணையாக இருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் அவரது விடாமுயற்சியை கண்டு வியந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.


Advertisement