2 வது டி-20 போட்டி: வெல்லப் போவது யார்?; மல்லுக்கட்டும் இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள்..!

2 வது டி-20 போட்டி: வெல்லப் போவது யார்?; மல்லுக்கட்டும் இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள்..!


2nd T20I: India vs South Africa to fight to win

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்ட் மைதானத்தில் நடந்த முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2 வது டி-20 போட்டி அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.  முதல் போட்டியில் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர். முதல் 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி அடுத்த ஓவர்களில் மேலும் 1 விக்கெட்டை கைப்பற்றி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையை சீர்குலைத்தது.

பின்னர் 107 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா (0), விராட் கோலி (3) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதையை நோக்கி வேகமாக பயணிக்க வைத்தார். நிதானமாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஒரு கட்டத்தில் சரவெடியாக வெடிக்க இந்திய அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் அடுத்தடுத்த பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினர்.

முதல் போட்டியில் பெற்ற வெற்றியினால் இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்கும். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டும். அதே நேரத்தில் வலுவான தென்னாப்பிரிக்க அணி தோல்வியில் இருந்து மீள கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறிவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டி-20 தொடரை இதுவரை கைப்பற்றியதில்லை என்ற சோகத்தை முடிவுக்கு கொண்டுவருமா இந்திய அணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.