சட்டம் ஓழுங்கு சீர்குலைந்தற்கு கோவை கார் வெடிப்பு சம்பவமே சாட்சி: அ.தி.மு.க பொன்விழாவில் செல்லூர் ராஜூ பேச்சு..!

சட்டம் ஓழுங்கு சீர்குலைந்தற்கு கோவை கார் வெடிப்பு சம்பவமே சாட்சி: அ.தி.மு.க பொன்விழாவில் செல்லூர் ராஜூ பேச்சு..!



The Coimbatore car explosion is a witness to the breakdown of law and order

மதுரையில் அ.தி.மு.க-வின் 51வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் மதுரை மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு கோவை கார் குண்டு வெடிப்பே சாட்சி என்று கூறியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:- கட்சி தொடங்கிய 50 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பெருமை அ.தி.மு.க வை சேரும். மக்கள் நல திட்டங்களை அமல்படுத்த நிதி இல்லை என்று அதிகாரிகள் சொன்னாலும், திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதியாக  இருப்பவன் தான் தலைவன். அப்படி உருவான திட்டம் தான் சத்துணவு திட்டம். நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜனுக்கு ஏழைகளின் நிலை தெரியுமா? படித்தவர்கள் மற்றும் பணக்காரர்களை மட்டுமே அவருக்கு தெரியும். அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் திட்டங்களை மூடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

தி.மு.க ஆட்சிக்கு வந்த 18 மாதங்களில் முதல்வர் ஸ்டாலினே வருந்தும் அளவுக்கு அமைச்சர்கள் பொது இடங்களில் அநாகரிகமாக பேசி வருகின்றனர். ஜாதி குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியுள்ளார். ஓசி, ஓசி பஸ், ஓசி பயணம் என்று பேசும் தி.மு.க அமைச்சர் பயன்படுத்தும் அனைத்தும் ஓசி தான்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 தருவதாக தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே நீட் ரத்து என்று சொன்னார்கள். இது வரையில் ரத்து செய்ய முடியவில்லை. உதயநிதி என்றைக்கு செங்கல்லை தூக்கினாரோ அன்று தொடங்கி செங்கல், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து விட்டது.

தி.மு.க ஆட்சியில் சமூக விரோதிகள் ஒன்று கூடி விட்டனர். கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வெடிப்பை போல் தற்போது கோவையில் கார் வெடித்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. புதிய வாகன சட்டம் லஞ்சத்திற்கு வழிவகுக்கும் சூழல் ஏற்படுத்தும். இதுதான் துக்ளக் ஆட்சி. இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.