ஈடில்லா திராவிட மாடல் ஆட்சி: கள்ளச்சாராய சாவுகளே சாட்சி..!! சீமான் கொந்தளிப்பு..!!

ஈடில்லா திராவிட மாடல் ஆட்சி: கள்ளச்சாராய சாவுகளே சாட்சி..!! சீமான் கொந்தளிப்பு..!!


Seeman has questioned whether the sale of bootleg liquor is a fruitless two-year achievement of the Dravida model government

கள்ளச்சாராய விற்பனையும் திராவிட மாடல் அரசின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிப்பதாக கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 30க்கும் மேற்பட்டோரில் சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்காவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறும் திமுக அரசு, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத்தவறி 10 உயிர்களை பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது.

அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா? கண்ணுக்குமுன் 10 உயிர்கள் உடனடியாக பலியானவுடன் ஏற்பட்டுள்ள மக்களின் மனக்கொந்தளிப்பிற்கு அஞ்சி உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் திமுக அரசு, மெல்ல மெல்ல பல இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்டுவரும் மலிவுவிலை மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன்? ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற திமுகவின் கடந்தகால வாக்குறுதி என்னானது? சாராய ஆலைகளை நடத்தும் திமுகவினர் தங்கள் ஆலைகளை இதுவரை மூடாதது ஏன்? கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், அரசு நடத்தும் மதுக்கடைகளை இதுவரை மூடாதது ஏன்? கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வினைவிட, திமுக அரசிற்கு மதுவிற்பனையால் வரும் பல்லாயிரம் கோடி வருமானமும், அதன் மூலம் நடைபெறும் ஆட்சி அதிகாரமும்தான் முக்கியமானதா? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது.

மேலும், ஆளும் கட்சி என்ற அதிகாரத்திமிரில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க முயன்ற காவல்துறையினரை மிரட்டி, கள்ளச்சாராய வியாபாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று திமுகவினர் தடுத்துள்ளதே 10 உயிர்கள் பலியாக முதன்மைக்காரணமாகும். காவல்துறையினரைத் தண்டிக்கும் விதமாகப் பணியிடமாற்றம் செய்துள்ள திமுக அரசு, கள்ளச்சாராய வியாபாரிகளுக்குத் துணைபோன திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்பதையும் திமுக அரசு விளக்க வேண்டும்.

ஆகவே, திமுக அரசு கள்ளச்சாராய விற்பனையை முற்று முழுதாக ஒழிப்பதோடு, தமிழ்நாட்டில் மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தி அரசு நடத்தும் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.